மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் பல பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முதலில் எழும் அச்சம், “மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டியிருக்கும்” என்பதுதான். ஆனால் மருத்துவ அறிவியல் இன்று கூறுவது வேறு. மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மார்பகத்தை அகற்றுவது கட்டாயமல்ல.
புற்றுநோய் எந்த கட்டத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, அது மார்பகத்தின் எந்தப் பகுதியில் உள்ளது உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து, பல பெண்களுக்கு மார்பகத்தைப் பாதுகாத்தபடியே புற்றுநோய் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆய்வு நிறுவனமான IARC வெளியிட்ட GLOBOCAN 2024 தரவுகளின்படி, இந்தியப் பெண்களில் மிகவும் அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய் மார்பக புற்றுநோயாகும். 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 2.37 லட்சம் பேருக்கு புதிதாக மார்பக புற்றுநோய் பாதிப்பு பதிவாகியுள்ளன. இது பெண்களிடம் கண்டறியப்படும் அனைத்து புற்றுநோய்களிலும் சுமார் 30 சதவிகிதம் ஆகும்.
தமிழ்நாட்டிலும் மார்பக புற்றுநோய் பெண்களிடம் அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டு (TNCRP) தரவுகளின்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரப் பகுதிகளில் மார்பக புற்றுநோயின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பெண்களிடம் கண்டறியப்படும் புற்றுநோய்களில் மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய்கள் சேர்ந்து பெரும் பங்கை வகிக்கின்றன.
புற்றுநோய்
எப்போது மார்பகத்தைப் பாதுகாக்க முடியும்?
புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்படும் மார்பக புற்றுநோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமே இருக்காது என்கிறார்.
“குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் நோய் கண்டறியப்பட்டிருந்தால், புற்றுநோயுள்ள பகுதியை மட்டும் அகற்றி, மீதமுள்ள மார்பகத்தைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சை (Breast Conservation Surgery) முறையைப் பயன்படுத்த முடியும். ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகச் சாத்தியமில்லை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

மார்பகத்தின் அளவு, கட்டியின் அளவு, கட்டி அமைந்துள்ள இடம், மார்பகத் திசுக்களின் தன்மை போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மார்பக அளவு சிறியது முதல் பெரியது வரை A, B, C, D, E, F, G, H என கணக்கிடப்படுகிறது என்று கூறும் மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன், “உதாரணமாக, சிறிய மார்பகத்தில் 2 அல்லது 3 செ.மீ. அளவிலான கட்டி கூட பெரிய பகுதியை பாதித்திருக்கலாம். அதே நேரத்தில், பெரிதான மார்பகத்தில் அதே அளவிலான கட்டி எளிதாக அகற்றப்படக்கூடியதாக இருக்கலாம்.” என்று சுட்டிக்காட்டுகிறார்.
அவரது கூற்றின்படி, கட்டி மார்பகக்காம்புக்கு அருகில் உள்ளதா அல்லது மார்பகத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ளதா என்பதும் முக்கியம். அக்குள் பகுதிக்கு அருகில், வெளிப்புறப் பகுதியில் கட்டி இருந்தால், அதை அகற்றிவிட்டு மார்பகத்தைப் பாதுகாப்பது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். ஆனால், மார்பகக் காம்பின் பின்புறம் அல்லது நடுப்பகுதியில் இருந்தால் சிகிச்சை சவாலாக மாறக்கூடும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது.
“சில நோயாளிகளில் அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே கீமோதெரபி வழங்கி கட்டியின் அளவைக் குறைக்கின்றனர். அதன் பிறகு மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை அளிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது” என்கிறார் மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன்.
புற்றுநோய்
உலகளவில் மார்பகப் பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை இன்று ஏற்கப்பட்ட சிகிச்சை முறையாக உள்ளது. உலக சுகாதார மையம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள், ஆரம்பக் கட்ட மார்பக புற்றுநோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கதிர்வீச்சு சிகிச்சையுடன் மார்பக பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை வழங்கப்படலாம் என்று கூறுகின்றன.
அமெரிக்க புற்றுநோய் சங்கம் (American Cancer Society) மற்றும் அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute) ஆகியவையும், ஆரம்பக் கட்ட மார்பக புற்றுநோயாளிகளில் மார்பக பாதுகாப்பு அறுவைச் சிகிச்சை மற்றும் முழு மார்பக அகற்றும் அறுவை சிகிச்சை (mastectomy) ஆகியவற்றுக்கு நீண்டகால உயிர் பிழைப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றன. எனவே, நோயாளிக்கு ஏற்ற சூழ்நிலைகளில் மார்பகத்தைப் பாதுகாப்பது மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்வாகும்.
இதனால், “மார்பக புற்றுநோய் என்றால் மார்பகத்தை அகற்ற வேண்டும்” என்ற பழைய எண்ணம் இன்று முழுமையாகச் சரியானதல்ல. நோய் எவ்வளவு விரைவாகக் கண்டறியப்படுகிறது என்பதே முக்கியம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், பல பெண்களுக்கு புற்றுநோயை வெல்வதுடன், மார்பகத்தையும் பாதுகாக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மார்பக வடிவத்தைப் பராமரிக்க முடியுமா?

“மார்பகத்தைப் பாதுகாக்கிறோம் என்றால் அது வெறும் புற்றுநோய் கட்டியை அகற்றுவதிலேயே முடிவதில்லை” என்கிறார் மார்பக புற்றுநோய் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் மஞ்சுளா ராவ்.
அவரது விளக்கப்படி, கட்டியை அகற்றிய பிறகு உருவாகும் வெற்றிடத்தை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (reconstruction) மூலம் நிரப்ப முடியும். “இதற்காக மார்பகத்தில் மீதமுள்ள திசுக்களையே பயன்படுத்தலாம். அல்லது வயிறு போன்ற உடலின் பிற பகுதிகளிலிருந்து திசுக்களை எடுத்து அந்த இடத்தில் பொருத்தலாம்” என்கிறார் அவர்.
இந்த அணுகுமுறை ஆரம்பக்கட்ட நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சில மூன்றாம் கட்ட புற்றுநோயாளிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் மஞ்சுளா ராவ். புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெறும் அதே நேரத்தில் மறுசீரமைப்பு சிகிச்சையையும் செய்து முடிக்க முடியும் என்கிறார் அவர்.
“இதன் முக்கிய பலன், நோயாளியின் உடல் தோற்றம் பெரிய அளவில் மாறாமல் இருப்பது. இது பெண்களின் தன்னம்பிக்கை, சுயமதிப்பு மற்றும் மனநலத்தைப் பாதுகாக்க உதவுகிறது” என்கிறார் மருத்துவர் மஞ்சுளா.
